கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்? இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு 3வது பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த 3வது பட்டியல் சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 நாடுகளைச் சேர்ந்த 33 லட்சம் பேரின் வங்கி கணக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்டது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தகவல்கள் பெறப்பட்டு, அதில் சட்டவிரோதமாக கருப்பு பணம் பதுக்கியிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ கட்சி உறுதி அளித்தது.

அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கும், சுவிட்சர்லாந்து அரசுக்கும் இடையே தன்னிச்சை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் வேறு பிற 75 நாடுகளுடனும் சுவிஸ் அரசு செய்து கொண்டுள்ளது. இதன்படி, சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகம், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் உட்பட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கணக்கு விவரங்களை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் முதல் முறையாக வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் வங்கி கணக்கு விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்படும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் அம்சமாகும்.

அதன்படி கடந்த ஆண்டு அக்டோரில் 86 நாடுகளுடன் சுவிஸ் வங்கி கணக்குகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அந்த வரிசையில், தற்போது 3வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இம்முறை இப்பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட கூடுதலாக 10 நாடுகள் சேர்ந்துள்ளன. ஆனாலும் 26 நாடுகள் சில விதிமுறைகளுக்கு உட்படாததால் அந்நாடுகளைச் சேர்ந்தவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மொத்தம் 70 நாடுகளைச் சேர்ந்த 33 லட்சம் வங்கி கணக்குதாரர்கள் விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

* சொத்து பட்டியல் வெளியாகவில்லை?

இம்முறை, முதல் முறையாக சுவிஸ் நாட்டில் சொத்துக்கள் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான எந்த தகவல்களும் உடனடியாக வெளியாகவில்லை. இதையடுத்து 4வது பட்டியல் அடுத்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.

Related Stories:

More
>