×

சுனில் நரைன் சுழலில் ராயல் சேலஞ்சர்ஸ் திணறல்

ஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், சுனில் நரைன் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது.
ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அவர் தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து இன்னிங்சை தொடங்கினார். இருவரும் 5 ஓவரில் 49 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். படிக்கல் 21 ரன் எடுத்து பெர்குசன் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த ஸ்ரீகர் பரத் 9 ரன் எடுத்து சுனில் சுழலில் வெங்கடேஷ் வசம் பிடிபட்டார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி 39 ரன் (33 பந்து, 5 பவுண்டரி) விளாசி நரைன் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர்கள் டி வில்லியர்ஸ் 11 ரன், கிளென் மேக்ஸ்வெல் 15 ரன் எடுத்து நரைன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி அணி 112 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
ஷாபாஸ் அகமது 13 ரன், டேனியல் கிறிஸ்டியன் 9 ரன் எடுத்து வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. ஹர்ஷல் படேல் 8, ஜார்ஜ் கார்ட்டன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

Tags : Royal Challengers , Royal Challengers stutter in Sunil Narine spin
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி