×

உலக கோப்பை தகுதிச்சுற்று உருகுவேயை வீழ்த்தியது அர்ஜென்டினா

பியூனஸ் ஏர்ஸ்: கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கால்பந்து உலக கோப்பை  போட்டியில் பங்கேற்க உள்ள தென் அமெரிக்க அணிகளை தேர்வு செய்வதற்கான  தகுதிச் சுற்று போட்டிகள் தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வருகின்றன. அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் உள்ள  லிபர்டி அரங்கில் நேற்று  அர்ஜென்டினா-உருகுவே அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, டி பால், மார்டினஸ் ஆகியோர் கோல் போட்டனர். சர்வதேச போட்டிகளில் 80 கோல் அடித்த முதல் தென் அமெரிக்க வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.

அர்ஜென்டினா இந்த தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. அந்த அணி 10 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 டிராவுடன்  22 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. பிரேசில் முதல் டிரா: மற்றொரு போட்டியில் கொலம்பியா - பிரேசில் அணிகள் மோதின. இப்போட்டி 0-0 என டிரா ஆனது. இது பிரேசில் அணி சந்திக்கும் முதல்  டிரா ஆகும். பிரேசில் 10 ஆட்டங்களில்  9 வெற்றி, ஒரு டிராவுடன் 28 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஈக்வடார் 3வது இடத்திலும், உருகுவே 4வது இடத்திலும் உள்ளன.  மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில், முதல் 4 இடங்களை பிடிக்கும் நாடுகள் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறும்.

Tags : Argentina ,Uruguay ,World Cup , Argentina beat Uruguay in World Cup qualifier
× RELATED சில்லி பாயின்ட்…