காஞ்சி, செங்கை மாவட்டங்களின் அனைத்து ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்  ஆகிய ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இதில், 5,34,130 வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை காரப்பேட்டை அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியிலும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஏனாத்தூர் சங்கரா கலை அறிவியல் கல்லூரியிலும் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருப்புலிவனம் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியிலும் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும், குன்றத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் கல்லூரியிலும் நடக்கிறது. மேற்கண்ட 5 வாக்கு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குடிநீர், கழிப்பறை, மின்விசிறி வசதி,  கட்சி முகவர்கள் அமரும் இடத்துக்கு மின்விசிறி, அறைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், கம்பி வேலிகள்  செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.  

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகள், 22 ஒன்றியக் கவுன்சிலர்கள், 2 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்த 288 வாக்குச்சாவடிகளில் இருந்து சீல் வைத்த வாக்குப்பெட்டிகள் கேளம்பாக்கம் அருகே படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் கூறியதாவது. இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதற்காக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், அவர்களது முகவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை மைய அனுமதிச் சீட்டு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த சீட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவர். வேறு நபர்கள் யாரும் இந்த வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், வெற்றி பெறும் வேட்பாளர்கள் பட்டாசு வெடித்தல் உள்பட கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியாக செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் முகவர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, அனைத்துக் கட்சியினரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் கடந்த 6ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், 54 ஊராட்சிகளில் 256 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில், தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், வாக்கு எண்ணப்படும் கல்லூரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குகள் எண்ணப்படும் அறை, வாக்குப்பதிவு பெட்டிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சரியாக இன்று காலை 8 மணிக்கு, வாக்கு பெட்டிகள் 10 அறைகளில் திறக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில் எண்ணப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் 8 ஒன்றியங்களின் வாக்குப் பதிவுகள் அச்சிறுப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரி, மல்ரோசாபுரம் சிஎஸ்ஐ இவெர்ட் மகளிர் கிறித்துவ கல்லூரி, பவுஞ்சூர் செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி, நெல்வாய் ஏசிடி பொறியியல் கல்லூரி, கிழக்கு தாம்பரம்  ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி,  படூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடக்கின்றன.

வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குகள் எண்ணுவதற்கு மொத்தம் 1107 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3,533 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர். அங்கு 815 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி  கண்காணிக்கப்படுகிறது, மேலும் ஒரு மையத்திற்கு 6 நுண்பார்வையாளர்கள் வீதம் 8 மையங்களிலும் 48 பேர் வாக்கு எண்ணும் பணியினை கண்காணிப்பார்கள் அந்த மையங்களில் அசம்பாதவிதங்களை தவிர்க்க 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* மறுதேர்தலில் 91 சதவீதம் வாக்குப்பதிவு

உத்திரமேரூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் கிராமத்தில் காலியாக உள்ள 2 வார்டுகளில், 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2வது  வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர்  போட்டியிட்டனர். இந்தவேளையில், தேர்தல் பணிக்கு வந்த அலுவலர், தவறுதலாக வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்ட பகுதியில் வாக்குச்சீட்டுகளை வாக்காளர்களுக்கு அளித்தார். சுமார் 50% வாக்குப்பதிவு நடந்த பிறகு, அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2வது வார்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 92 வாக்குகள் உள்ள இந்த வார்டில் மாலை 6 மணிவரை 91 சதவீதம் வாக்குகள் பதிவாயின. பின்னர், வாக்குப் பெட்டிகளை போலீஸ் பாதுகாப்போடு சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

More
>