×

பேச்சிப்பாறை அணைக்கு 7500 கன அடி நீர் வரத்து குமரியில் அடைமழையால் மலையோர கிராமங்கள் துண்டிப்பு: டெல்டாவில் மழைக்கு 2 பெண்கள் பலி

சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும்  மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி என  மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழையால் அணைகளுக்கான நீர் வரத்தும் மளமளவென உயர்ந்ததுடன், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேச்சிப்பாறை அணைக்கு 7,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர் மட்டம் 44.45 அடியை தாண்டியது. இதனால் உபரிநீர் 3,000 கனஅடி வெளியேற்றப்பட்டது. இதே போல் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 73.10 அடியாக உயர்ந்தது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.53 அடியானதால், உபரிநீர் 1000 கனஅடியும் வெளியேற்றப்பட்டது. கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்ததால், அருகே உள்ள குற்றியாறு பகுதியில் இருந்து மோதிரமலைக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மோதிரமலை உள்ளிட்ட மலையோர கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

டெல்டாவில்: டெல்டா மாவட்டத்தில் தொடர் மழையால் கடைமடை பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேரடி விதைப்பு செய்து தண்ணீருக்காக காத்திருந்த நிலையில் மழையால் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் தேவையான நீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், சித்தமல்லி, பரப்பனாமேடுஉள்ளிட்ட இடங்களில் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற் கதிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். திருவாரூர் அருகே பிலாவடிமூலையை சேர்ந்த தனபால் மனைவி கிளியம்மாள்(65) என்பவர், நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தபோது, மழைக்கு ஊறியிருந்த வீட்டின் சன்ஷேடு இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெருவில் வசிக்கும் மாரியம்மாள் (40) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமான மழை தொடர்கிறது. பாபாநாசம் அணையில் இருந்து நேற்று காலை விநாடிக்கு 205 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து 1,237 கனஅடியாக இருந்தது. இதனால் நீர்மட்டம் 93 அடியில் இருந்து 94.40 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 106.86 அடியில் இருந்து நேற்று 108.33 அடியாக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடனா அணைக்கு நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 62.20 அடியானது. ராமநதி அணை 52.50 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 36.10 அடியாக நீடிக்கிறது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 129.75 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 60 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

* ஊட்டி மருத்துவமனை தடுப்புச்சுவர் இடிந்தது
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிளில் தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கிய கன மழை 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கன மழை காரணமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. அது உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. ஊட்டி மார்க்கெட், லோயர் பஜார் போன்ற பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

Tags : Pechipparai dam ,Kumari , 7500 cubic feet of water supply to Pechipparai dam in Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...