ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது நினைவிருக்கிறதா? என மிரட்டல் நாம் தமிழர் கட்சி பேச்சாளர் கைது: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு

தக்கலை: தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன் நேற்று  முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய, அக்கட்சியின் பேச்சாளர் துரைமுருகன் என்பவர், தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதுடன், நாங்கள் எல்லாம் விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள். ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது நினைவு இருக்கிறதா? எனப் பேசி கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை கூறினார்.

இது தொடர்பாக தக்கலை சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கொடுத்த புகாரின்படி  துரைமுருகன் மீது, இந்திய தண்டனைவியல் சட்டப்பிரிவு 143, 153, 153A, 505(2), 506(i), 269  ஆகிய 6 பிரிவுகளில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை  தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிந்த பின் சென்னைக்கு செல்ல முயன்ற துரைமுருகனை நள்ளிரவில் போலீசார்  சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தீனதயாளன் முன் ஆஜர்படுத்தினர். வரும் 25ம் தேதி வரை துரைமுருகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  அதை தொடர்ந்து அவர் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஹிம்லர் என்பவர் உள்பட பலர் மீதும் மேற்கண்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு பரப்பும் வகையில் யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாக புகாரின்படி நாம் தமிழர் கட்சி பேச்சாளர் துரைமுருகன் மீது தஞ்சை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ராஜீவ், சோனியா குறித்து அவதூறு பேச்சு சீமானை கைது செய்ய கோரி காங்கிரசார் கமிஷனரிடம் மனு

கோவை:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தமோரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி குறித்தும், காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். பெண் தலைவர் பற்றிய அவதூறு பேச்சு, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிப்பது போன்றதாகும். சீமானின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம்-ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சீமானின் அவதூறு பேச்சு குறித்து, ஏற்கனவே சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, சீமானை உடனடியாக கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories:

More
>