கடல் பச்சை நிறமாக மாறியது காரணமா? கொத்து கொத்தாக மீன்கள், டால்பின் இறப்பு: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கவலை

கீழக்கரை: கடல்நீர் பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன்கள், டால்பின் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பச்சை நிற பூங்கோரை பாசிகள் கரை ஒதுங்கி வந்தன. மேலும் கடல் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசியது. நேற்று காலை கீழக்கரை கடற்கரையில் அதிகளவில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மீன்வள ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கீழக்கரை வந்த ஆராய்ச்சியாளர்கள் கடற்கரைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடற்பாசி அதிகளவில் உற்பத்தியாகும். இதற்கு ஆல்கல் புளூம் என்று பெயர். இதனை மீனவர்கள் ‘‘பூங்கோரை’ என்றழைப்பார்கள். மகரந்த சேர்க்கைக்காக இந்த பாசிகள் கடலில் படரும்போது கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். இந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிட்டதால் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் இறந்திருக்கலாம். பெரும்பாலும் ஓரா, சூடை ஆகிய மீன்களே இறந்து கரை ஒதுங்கி உள்ளன’’ என்றனர். மீனவளத்துறை அதிகாரிகள் கீழக்கரையில் இறந்து மிதந்த மீன்கள் மற்றும் கடல்நீரை எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பாம்பன் கடலில் டால்பின் ஒன்று இறந்து மிதந்தது.

Related Stories: