×

பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் எம்பி சரண்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே  பணிக்கன்குப்பத்தில்  கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார். முதலில் காடாம்புலியூர் போலீசார் விசாரித்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றி கடந்த 8ம் தேதி எம்பியின் உதவியாளர் நடராஜ், அல்லாபிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து எம்பி ரமேஷ் தொலைபேசி வாயிலாக என் மீது போடப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறினார்.

இந்நிலையில் நேற்று பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.பி ரமேஷ் சரணடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும், 13ம் தேதி கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி கற்பகவள்ளி  உத்தரவிட்டார்.
இதுகுறித்து எம்.பி ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், எனது முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து திமுக மீது சில அரசியல் கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது.  தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சி மீது வீண் பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என கருதி நீதிமன்றத்தில் சரணடைந்தேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது. இதை சட்டத்தின் முன்பு ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன் என கூறியுள்ளார்.


Tags : Cuddalore ,Charan ,Panruti Court , Cuddalore MP Charan in Panruti Court
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...