×

இந்தியா-சீனா இடையே நடந்த 13ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: இரு ராணுவமும் பரஸ்பர குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையே நடந்த 13ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், லடாக் எல்லையில் மீதமுள்ள பிரச்னைகளில் எந்த தீர்வும் ஏற்படவில்லை என இந்திய ராணுவம் கூறி உள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு மே 5ம் தேதி அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் மோதல் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அருணாச்சலப்பிரதேசம் தவாங்க் செக்டார் பகுதியில் சுமார் 100 சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து அத்துமீறினர்.

இந்த சம்பவம் இரு தரப்பு உறவில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில், லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ மட்டத்திலான 13ம் கட்ட பேச்சுவார்த்தை சீனாவுக்கு உட்பட்ட மோல்டா எல்லையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் (எல்ஏசி) சீனா தனது நிலையை மாற்ற முயற்சிக்கும், ஒருதலைப்பட்ச முயற்சிகள் காரணமாக 13ம் கட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க சீனா முன்வர வேண்டும். லடாக் எல்லையில் மீதமுள்ள பிரச்னைகளை தீர்க்க ஆக்கப்பூர்வ பரிந்துரைகளை இந்தியா வழங்கியது. ஆனால் சீனா அவற்றை ஏற்க மறுத்து விட்டது. இதனால் மீதமுள்ள பிரச்னைகளில் எந்த தீர்வும் ஏற்படவில்லை’ என குறிப்பிட்டுள்ளது. அதே  ேபால சீனாவும், அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறியதை நியாயப்படுத்தி, இந்திய ராணுவம் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளது. இதனால் 17 மாதமாக லடாக் விவகாரம் தொடர்ந்து பிரச்னையாகவே நீடித்து வருகிறது.

* சீனா அடாவடி: மோடி அமைதி
லடாக்கில் சீனா தொடர்ந்து அத்துமீறி புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருவது கவலை அளிப்பதாக சமீபத்தில் இந்திய ராணுவ தளபதி நரவனே கூறியிருந்தார். அவரது பேட்டி குறித்த செய்தியை டிவிட்டரில் டேக் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘சீனா தொடர்ந்து தங்கி இருக்கிறது, எங்கே? நம் நிலப்பரப்பில்’’ என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் ‘விவசாயிகள் கொல்லப்பட்டாலும், பாஜவினர் கொல்லப்பட்டாலும் அமைதி காத்திடும் பிரதமர் மோடி, அவரது கோடீஸ்வர நண்பர்களுக்கு ஏதாவது என்றால் வெகுண்டெழுந்து விடுவார்’ என கூறி உள்ளார்.

Tags : India ,China , Phase 13 India-China talks fail: Both armies blame each other
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை