கொல்லம் அருகே கொடூரமாக பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் குற்றவாளி: தண்டனை விவரம் நாளை அறிவிப்பு; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் கணவர் குற்றவாளி என்று கொல்லம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா(25).  இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மே 7ம் தேதி உத்ராவை பாம்பு கடித்ததாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உத்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை விஜயசேனன் அப்போதைய கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துக்காக உத்ராவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜ் மீது கொலை செய்தல், துன்புறுத்துதல், வனவிலங்கு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சொத்துக்காக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை  வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சுரேசையும்  போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் நேற்று  தீர்ப்பு அளித்தார். அதில், உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் குற்றவாளியாவார். அவருக்கான தண்டனை விவரம் அக்.13 (நாளை) அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Related Stories:

More
>