×

பள்ளிக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி விபத்து மாணவிகள் உள்பட மூவர் பலி: சோழவரம் அருகே பரிதாபம்

புழல்: சோழவரம் அருகே லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் குமார்.  வாகன வேக கட்டுப்பாட்டு கருவி ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். இவரது மகள்கள் கனிஷ்கா (16), அஸ்விதா (14) ஆகியோர், சோழவரம் அடுத்த பஞ்சட்டி கிராமத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த மாணவிகளின்  தாய் மாமன் நாகராஜ் (40), கொருக்குப்பேட்டை பாரதி நகரில் குடியிருந்து, மாமா குமாருக்கு உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை குமார் வீட்டிற்கு வந்த நாகராஜ், அவரது 2 மகள்களையும் காரில் ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இதில், கனிஷ்கா முன் சீட்டிலும், அஸ்விதா பின் சீட்டிலும் அமர்ந்திருந்தனர். காரனோடை மேம்பாலத்தின் மீது சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் அதிவேகமாக  மோதி, முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரை ஓட்டிய நாகராஜ் மற்றும் கனிஷ்கா ஆகியோர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அஸ்விதா படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார் மற்றும் மீட்பு படையினர், உயிருக்கு போராடிய அஸ்விதாவை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், நாகராஜ் மற்றும் கனிஷ்கா உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்விதா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது சடலத்தையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு காரில் சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Three killed, including students, in car crash with lorry while on school trip
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்