எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுக தொண்டர்கள் சசிகலாவிடம் செல்ல மாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: சசிகலா சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் ஒரு தொண்டன் சாகும் வரை அதிமுகவில்தான் இருப்பான். அவன் எங்கேயும் போக மாட்டான். உங்ககிட்ட (சசிகலா) வர மாட்டான். 2வது, சிறையில் இருந்து வந்தபோது ஜெயலலிதா சமாதிக்கு ஏன் நீங்கள் போகவில்லை? இப்போது அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள், உங்க பக்கம் யாரும் வர மாட்டாங்க. தனக்கு பின்னாலும் 1000 ஆண்டு காலம் அதிமுக கட்சி வளரும் என்று எம்ஜிஆர் கூறினார். அதிமுக கட்சி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதில் 30 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. 5 முதலமைச்சரை கண்டுள்ள மாபெரும் இயக்கம். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை எக்கு கோட்டையாக மாற்றி காட்டினார்.

அதிமுக பொன்விழா எப்படியெல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என்று கட்சி தலைமை அறிவிக்கும்.உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் கூறியுள்ளார். ஒரு கோடியே 46 லட்சம் வாக்குகள் பெற்று இமயமலை போன்று உயர்ந்து நிற்கிறது அதிமுக. பரங்கிமலை போல் தாழ்ந்து கிடப்பவர்கள் சொல்வது உண்மையிலேயே, 21ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது போன்று யூகம் அமைக்காமல் தேர்தலில் நிற்கவில்லை. அதிமுக சிறப்பான யூகம் அமைத்துதான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அவைத்தலைவர் பெயருக்கு என் (ஜெயக்குமார்) பெயர் இருப்பதாக கூறுகிறீர்கள். நான் எப்போதும் அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன்தான். பதவி எனக்கு இரண்டாம் பட்சம்தான். அதிமுக தொண்டன் என்ற பெருமையே எனக்கு போதும். கட்சி எந்த பதவி கொடுத்தாலும், அதை பதவியாக நினைக்காமல் பணியாகத்தான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>