×

பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை: அதிமுகவின் புதிய அவைத்தலைவர் யார்? ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பலப்பரீட்சை

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நேற்று அவசரமாக கூடியது. புதிய அவைத்தலைவர் யார் என்பது குறித்தும், பொன்விழா கொண்டாட்டம் சிறப்பாக நடத்துவது, சசிகலா குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் பதவியை பிடிக்க இரு அணியினரும் தீவிரமாக முயன்று வருவதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. அதிமுகவில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.  இதன்மூலம் இருவருக்கான மோதல் போக்கு வெளிப்படையாக தெரிய வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். வருகிற 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டு 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வருகிற 16ம் தேதி சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். தற்போது அதிமுகவின் அவைத்தலைவர் பதவியை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. மதுசூதனன், ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். பின்னர் கடைசி காலத்தில் இபிஎஸ் அணிக்கு மாறிவிட்டார். கட்சியில் தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவைத்தலைவர் பதவியை பிடிக்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வமோ, கட்சியின் அமைப்பு தேர்தல் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு அவைத் தலைவர் குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறி வருகிறார்.இந்த பரபரப்பான சூழலில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், வழிகாட்டு குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், காரசார விவாதங்கள் நடந்தன. இதில், பேசிய பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை வழிநடத்திச் செல்லும் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அப்போது தான் கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல முடியும். வரவுள்ள தேர்தல்களிலும் வெற்றி பெற முடியும் என்று கூறினர். கூட்டம் பிற்பகல் 12 மணிக்கு முடிவடைந்தது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக நேற்று நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவிலும், பிற மாநிலங்களிலும் அதிமுக பொன்விழா ஆண்டை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சிறப்பாக கொண்டாடவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று நடந்த அதிமுக அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி வருகிற 17ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக தொடக்க விழா ஆண்டு மலர் வெளியிடப்படும். வழக்கமாக அவைத்தலைவர் தான் ஆண்டு மலரை வெளியிடுவார். அவைத்தலைவர் மதுசூதனன் மரணமடைந்து விட்டதால் அதிமுகவிற்கு புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அவைத்தலைவர் பதவியைப் பிடிக்க இரு அணிகளும் முயன்றதால், டிசம்பருக்கு பின்னர் அவைத் தலைவரை தேர்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. அவைத்தலைவர் குறித்து இரு அணிகளும் தீவிரமாக தங்கள் கருத்துகளை தெரிவித்தன. மேலும், அதிமுகவை சசிகலா கைப்பற்றும் முயற்சியை அனைவரும் ஒற்றுமையாக நின்று முறியடிக்க வேண்டும் என கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து சமீபத்தில் பாஜ மூத்த தலைவர் ஒருவர் அமித்ஷாவுடன் பேசியபோது, சசிகலாவால் கடந்த தேர்தலில் குறிப்பிட்ட வாக்குகளை பெற முடியவில்லை. தோல்வியை தழுவினார். ஏன் டிடிவி.தினகரனே தோல்வியடைந்து விட்டார். அவர் அதிமுகவுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார். இந்த தகவல் அதிமுக நிர்வாகிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் உற்சாகமடைந்து, சசிகலாவுக்கு நிரந்தரமாக செக் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்தும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Golden Festival ,EPS , Advice on how to celebrate the Golden Jubilee year: Who is the new AIADMK leader? OBS, EPS team multi-examination
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின்...