×

கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மாற்றம்: 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் வழக்குகளில் தீர்ப்பளித்தவர்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி திருநெல்வேலி சுப்பையா சிவஞானம். திருநெல்வேலி மாவட்டத்தில் 1963ல் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் சுப்பையா, தாய் நளினி. டி.எஸ்.சிவஞானம் லயோலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் 1986ல் சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 2000ல் மத்திய அரசு வக்கீலாக பதவி வகித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், கஸ்டம்ஸ் துறை வக்கீலாகவும் பணியாற்றியவர். கடந்த 2009 மார்ச் 31ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்று 2011 மார்ச் 29ல் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவு செல்லும் என்ற முக்கிய தீர்ப்பையும், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பும் இவரது தீர்ப்புகளில் முக்கியமான தீர்ப்புகளாக கருதப்படுகிறது. தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ்.சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Tags : Chennai High Court ,DS Sivagnanam ,Kolkata High Court , Chennai High Court Judge DS Sivagnanam transferred to Kolkata High Court: Judge in 8-lane, Sterlite cases
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...