×

இரண்டு கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.! காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: அடையாள அட்டை கட்டாயம்.!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இரண்டு கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்புமனுக்களும், 28 மாவட்டங்களுக்கான தற்செயல் தேர்தலில் 789 பதவியிடங்களுக்கு 2,547 வேட்புமனுக்களும் பெறப்பட்டன. மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2,874 பதவியிடங்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 119 பதவியிடங்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 2 பதவியிடங்களும் என 3,000 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஒரு  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடம், 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு வேட்புமனுக்கள் பெறப்படாததாலும், திரும்பப்பெற்றுக்கொண்டதாலும் இப்பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மீதமுள்ள 138 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1375 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2,779 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 6ம் தேதி முதல்கட்டமாக 14 ஆயிரத்து 662 பதவியிடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 9ம் தேதி 12,341 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 77.43 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குசாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6,652 வாக்குசாவடிகளிலும் மொத்தம் 14,573 வாக்குசாவடிகளில் நடைபெற்றது. ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களிலும் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இரண்டு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில், கடந்த 9ம் தேதி, 2019ல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்கள் என 789 பதவியிடங்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டுகள் பிரிக்கும் அறைக்கு கொண்டுவரப்படும். அங்கு வாக்குச்சீட்டுகள் வகைப்படுத்தி பிரிக்கப்படும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர், வாக்கு எண்ணும் முகவர்களைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் யாரும் கைபேசிகளை கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை முடிவினை https://tnsec.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 6,228 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தநிலையில், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறுவது குறித்து மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி, வாக்கு எண்ணுகை மையங்களுக்கு வாக்கு எண்ணுகை அலுவலர்கள் காலை 6.30 மணிக்கு ஆஜராவதை உறுதி செய்திடவும், வாக்கு எண்ணுகை மையத்திற்குள் உரிய அடையாள அட்டையின்றி எவரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணுகை அலுவலர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணுகை மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும், வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணுகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணுகை மையத்திற்கு வெளியில் 200 மீட்டர் இடைவெளிக்கு தேவையின்றி கூட்டம் கூடுவதை தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அஞ்சல் வாக்குகள் எண்ணுகையின் போது இவ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைக் கையேடு நடைமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணுகையினை சிறப்பாக முடித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கான வாக்கு எண்ணுகை முறையாக முடிவுற்றபின்னர் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை அறிவித்திடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கோவிட் 19 வழிகாட்டு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்கு எண்ணுகை மையங்களில் சிசிடிவி பதிவு குறித்த ஏற்பாடுகள் செய்தல், வாக்கு எண்ணிக்கைக்கு போதுமான மேசைகள் மற்றும் அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்தல், மையத்தில் கோவிட் 19 சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், வாக்குச்சீட்டுகள் எண்ணுகை முடிந்தவுடன் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் குறித்த அறிவுரைகள், மையங்களில் தேவையில்லாத கூட்டம் சேர்த்தலை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதை உறுதி செய்தல், மையங்களில் உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்தல், முழுமையான மின்சார வசதி மற்றும் மழையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் முடிவுகள் உடனடியாக மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, வரும் 16ம் தேதியுடன் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு 20ம் தேதி நடைபெறும். சாதாரண தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் கூட்டம் 22ம் தேதி நடைபெறும்.

Tags : Two phase rural local elections.! Voting starts at 8 am: ID card mandatory!
× RELATED சொல்லிட்டாங்க…