×

நீட் தேர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு  எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகளை  வாபஸ் பெறும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: நீட் தேர்வை  எதிர்த்து கடந்த 2014 முதல் 2021 வரை போராட்டம் நடத்தியவர்கள் மீது  தொடரப்பட்ட வழக்குகள், 2011 முதல் 2021 வரை டாஸ்மாக் கடைகளை எதிர்த்து  போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற அரசு முடிவு  செய்துள்ளது. இந்த போராட்டங்களின்போது தேச ஒற்றுமைக்கு களங்கம்  ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், வன்முறையில்  ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இதில் அடங்காது.

நீட் எதிர்ப்பு  போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 341  வழக்குகள், நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள 105 வழக்குகள் என மொத்தம்  446 வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு  போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணையில் உள்ள 339  வழக்குகள் மற்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் 83 என மொத்தம் 422  வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. ஆக மொத்தம் 868 வழக்குகளை வாபஸ்  பெறப்படுகிறது.  போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்,  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள வழக்குகள் ரத்து  செய்யப்படுகிறது. நீதிமன்றங்களில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள்  குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 321ன்கீழ் அரசு குற்றவியல் வக்கீல்களால்  உரிய சட்ட விதிகளின்படி வாபஸ் பெறப்படும்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Tags : NEET ,Tasmac ,Tamil Nadu , NEET selects 868 cases against protesters against Tasmag stores: Tamil Nadu government issues order
× RELATED இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை...