×

பயோ டெக்னாலஜி படிப்பிற்கு 69% இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: நடப்பு ஆண்டில் பயோ டெக்னாலஜி படிப்பிற்கு 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வை பொறுத்தவரை இந்த ஆண்டில் எந்த கல்லூரிகளிலும் காலி இடங்கள் இருக்காது. முதல் 2 சுற்றுகளின் முடிவில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். எனவே பெரும்பாலும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது உண்மை.

அதுமட்டுமில்லாமில் பயோ டெக்னாலஜி படிப்பிற்கு கடந்த ஆண்டில் 10% பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதனடிப்படையில் இந்த ஆண்டும் பயோ டெக்னாலஜி படிப்பிற்கு தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அந்தவகையில் பயோ டெக்னாலஜி படிப்பிற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார். ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும் சரி பயோ டெக்னாலஜி படிப்பிற்கு தேர்வுகளின் அடிப்படையில் 69% இடஒதுக்கீட்டின்படி தான் சேர்க்கை நடத்தப்படும். நடப்பு கல்வி ஆண்டில் பொருளாதார இடஒதுக்கீடு பின்பற்றபடவில்லை.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 69% இடஒதுக்கீட்டின்படி தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. சமூகநீதி, இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில் 7.5% உள்ஒதுக்கீட்டின்படி 11,047 இடங்கள் இருக்கும் நிலையில் இதுவரை 5,970 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். அடுத்தடுத்த கட்ட கலந்தாய்வுகளிலும் அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை பெறுவார்கள். காலி இடங்களை நிரப்புவதற்காக தேவைப்பட்டால் கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்தப்படும். பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Ponmudi , 69% reservation for biotechnology students: Minister Ponmudi interview
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...