×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகை தொகுப்பு விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு பெட்டகம் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். சென்னை ஆவின் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பாக சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனையை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார். காஜு கட்லி, ஜாங்கிரி, லட்டு, பால் பேடா, பால் கோவா போன்ற இனிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு இனிப்பு பெட்டியை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில்  பால்வளத்துறை செயலாளர் தென்காசி சு.ஜவஹர், ஆவின் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆவின் இணை நிர்வாக இயக்குநர் முருகேசன் மற்றும் ஆவின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகுந்த சிறப்பு இனிப்புகளான 5 வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு  அறிமுகம் செய்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இனிப்பு வகைகளில் 15 டன் விற்பனை செய்திருக்கிறோம். ரூ.1.2 கோடி இதன் மூலம் கடந்த ஆண்டு லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு அதிக விற்பனை என்ற நோக்கத்தோடு 25 டன் இலக்கை வைத்திருக்கிறோம். ரூ.2.2 கோடிக்கு இதை உயர்த்தவும் அதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 26 லட்சம் லிட்டர் தான் விற்பனை இருந்தது. தற்போது 1 லட்சத்து 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்து 27 லட்சத்து 70 ஆயிரம் லிட்டராக உள்ளது. பால் உற்பத்தி என்பது 36 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் சாதாரண ஒரு பணியிடமாறுதலை கூட பலவிதமான முறைகேடுகள் நடத்தி தான் செய்தார்கள். ஆனால், இப்போது எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஒரே இரவில் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆட்கள் தேர்விலும் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டு அதையும் நிறுத்தி வைத்துள்ளோம். டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 800 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவே எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Deepavali ,Minister ,S.M.Nasser , Sale of special sweets in the spirit ahead of Deepavali: Minister S.M.Nasser started
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...