×

சுற்றுலா பேருந்துகளை தமிழகத்திற்குள் இயக்க தனி வரி செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுற்றுலா பேருந்துகளை அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் இயக்கும்போது தனி வரி செலுத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ள மனுவில், படுக்கை வசதி கொண்ட சுற்றுலா பேருந்துகளை இயக்கி வருகிறோம். எங்கள் பேருந்துகள் நாகாலாந்து மற்றும் புதுவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டபடி பேருந்துகளை இந்தியா முழுவதும் இயக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். எங்களது சுற்றுலா பேருந்தை புதுவையில் இருந்து கோவைக்கு இயக்கிய போது கடலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பேருந்தை முடக்கியுள்ளார் இதைநீக்கி வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், . அகில இந்திய அனுமதி பெற்றுள்ளதால் தமிழகத்தில் வாகனத்தை இயக்க எந்த வரியும் செலுத்த தேவையில்லைஎன்று தெரிவித்தனர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் நஸ்ருதீன், தமிழகத்தில் பேருந்துகள் பயணிக்கும் போது வரி செலுத்த வேண்டும். வெளி மாநில பேருந்தாக இருந்தாலும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வரி செலுத்த வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதி, மாநில அரசுகள் வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு எடுத்து கொள்ளவில்லை. எனவே மாநில அரசுக்கு வரி செலுத்தித்தான் ஆக வேண்டும். இவ்வாறு வரி விதிப்பது மாநில அரசின் சிறப்பு அதிகாரம். இதில் எந்தவித சட்ட விரோதமும் இல்லை.எனவே, இது தொடர்பாக மனுதாரர்கள் போக்குவரத்து துறைக்கு உரிய விளக்கம் அளித்து பேருந்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu , Separate tax to be paid for operating tourist buses in Tamil Nadu: High Court order
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...