சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணி நிறுத்தம்: கேமரா பதிவுகள் மட்டும் ஆய்வு

கூடலூர்: மசினகுடி அடுத்த சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கேமரா காட்சிகளை கண்காணித்து அதில் டி23 புலிதான் என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் வனப்பகுதிக்குள் செல்ல திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதிகளில் 4 பேரை டி23 புலி தாக்கி கொன்றது. இந்த புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

வனத்தில் கூடுதலாக  65 கேமராக்களை பொருத்தி கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் புலி இன்னமும் சிக்கவில்லை. சில முறை கண்களில் தென்பட்டது. ஆனால் அப்போது மயக்க ஊசி செலுத்த முடியாததால் புலியை பிடிக்க முடியவில்லை. நேற்று 16வது நாளாக புலியை பிடிக்கும் பணி நடந்தது. ஆனால் புலி வனத்துறையினரின் கண்களில் சிக்கவில்லை. இந்த நிலையில் வனத்தில் பொருத்தப்பட்டுள்ள 2 கேமராவில் மேலும் 2 புலியின் உருவம் பதிவாகியுள்ளது.

ஆனால் அந்த இரண்டு உருவங்களும் டி23 புலி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: டி23 புலியின் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கேமராக்களும் சோதனை செய்யப்பட்டன. அப்போது சிங்காரா வனப்பகுதியில் வெவ்வேறு இடங்களிலிருந்த 2 புலிகளின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த 2 புலிகளின் வரிகளைப் பார்த்தபோது அது டி23 புலி அல்ல என்பதும், அவைகள் வெவ்வேறு புலிகள் என்பதும் தெரியவந்தது.

கடந்த 8ம் தேதி மாயார் பகுதியில் புலியால் மாடு கொல்லப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் புலி உருவம் பதிவாகவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கடந்த 16 நாட்களாக டி23 புலியை தேடும் பணியில் ஈடுபட்டாலும், அதுபற்றி எந்தவித முன்னேற்றமும் இல்லாததாலும், புலியை சுட்டு பிடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாலும் வனப்பகுதிக்குள் சென்று புலியை தேடும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆங்காங்கே கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து டி23 புலிதானா? என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் அந்த பகுதிக்கு செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: