×

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை எதிரொலி: மகாராஷ்டிராவில் 13 அனல்மின் நிலையங்கள் மூடல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் 13 நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. வரும் 3 நாட்களில் தலைநகர் டெல்லியில் மின் விநியோகம் பாதிக்கும் என்று அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 10 முக்கிய நகரங்களில் தினமும் ஒருமணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கிராமப் புறங்களில் 10 மணி நேரம் வரை மின்ெவட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒன்றிய மின்துறை அமைச்சகம் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்றும், மாநிலங்களில் மின்வெட்டு இல்லை என்றும் கூறி வருகிறது. இந்நிலையில், ெடல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘டெல்லியின் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. என்.டி.பி.சி ஆலைகளின் உற்பத்தி திறன் 55 சதவீதமாக குறைந்துவிட்டது. ஏற்கனவே 4,000 மெகாவாட் மின்சாரத்தை நாங்கள் பயன்படுத்தினோம். ஆனால் தற்போது அதில் பாதி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்றார். இதற்கிடையே, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மகாராஷ்டிரா மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (எம்.எஸ்.இ.டி.சி.எல்) சொந்தமான 13 அனல் மின் நிலைய அலகுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 3,330 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி இடைவெளியை நிரப்புவதற்காக நீர் மின்சாரம் மற்றும் பிற மின் உற்பத்தி ஆதாரங்கள் குறித்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீரற்ற மின்விநியோகத்தால் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்துள்ளதால், அண்டை மாநிலங்களில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஓபன் மார்க்கெட் மூலம் யூனிட்டுக்கு ரூ.13.60 என்ற விகிதத்தில் 700 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி, பகல் அல்லது இரவு நேரங்களில் 8 மணி நேரம் மட்டுமே விவசாய இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மும்முனை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் நுகர்வை குறைக்கவும், தேவைக்கும் விநியோகத்திற்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில மின் பயன்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Maharashtra , Coal shortage echoes across the country: 13 power plants shut down in Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...