பாலியல் வழக்கு விசாரணை: முன்னாள் டிஜிபி, எஸ்பி கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

விழுப்புரம்: கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியின் போது முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமிழக சட்டம் ஒழுங்கு முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே, முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட் வரம்பிற்குள் வராது என்றும், இங்கு விசாரணை நடத்த கூடாது என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் எஸ்பி கண்ணன் தரப்பில் தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தனியாக ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த 2 மனுக்களும் கடந்த 4ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி கண்ணன் ஆஜராகவில்லை.

அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன் வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தவிட்டார். இதற்கிடையே இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி எஸ்பி கண்ணன் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: