×

ரயில்வே திட்டங்களை விரைவில் முடித்திடுக: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை : ரயில்வே திட்டங்களை விரைவில் செய்து முடித்திட வேண்டும் எனத் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக டி.ஆர்.பாலு அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மனுக்களின் தொகுப்பை தென்னிந்திய ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் இன்று (11-10-2021) வழங்கிய டி.ஆர்.பாலு, தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை டிவிஷனல் ரயில்வே மேனேஜர், தலைமைத் திட்ட அலுவலர் உள்ளிட்ட தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் தவிர, தூத்துக்குடி, அரக்கோணம், மத்திய சென்னை, தென்சென்னை, திண்டுக்கல், பொள்ளாச்சி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மக்களவைத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், பி.வேலுச்சாமி, கே.சண்முகசுந்தரம், எஸ்.செந்தில்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் விடுத்துள்ள பல்வேறு ரயில்வே பணிகள் தொடர்பான கோரிக்கைகளையும், டி.ஆர்.பாலு தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தேஜஸ் எகஸ்பிரஸ், தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வது, டி.ஐ.சைக்கிள் நிறுவனம் அருகேயுள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்துதல், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் - ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது, 2012இல் தொடங்கப்பட்ட ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்தல், மீனம்பாக்கம் (திரிசூலத்தில்) மற்றும் குரோம்பேட்டை இராதா நகர் சுரங்கப்பாதைகள் அமைத்தல், தாம்பரம் ரயில் நிலையத்தில் 5 மற்றும் 6, 7 மற்றும் 8 நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைத்தல், தாம்பரம் ரயில் நிலையத்தில் இதயநோய், சர்க்கரை நோய்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாகப் பரிசீலித்து அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித்தார்.

மேலும், விஜயவாடாவிலிருந்து சென்னை, எண்ணூர், தூத்துக்குடித் துறைமுகங்களுக்கு தனிப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் பாதை, திருக்குவளை – நாகப்பட்டினம், தஞ்சாவூர் – ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை, மன்னார்குடி – மதுக்கூர் – பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைகள், சென்னை ஐ.சி.எப்.இல் இரண்டாவது ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைத்தல், தமிழகமெங்கும் ஆளில்லாத ரயில் கடவுப் பாதைகளில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளபப்ட்டது.

மேலும், கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளபடி மும்பை - மதுரை லோக்மான்யா எக்ஸ்பிரஸ் ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டிப்பது, சென்னை – தூத்துக்குடி இடையே தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக புதிய எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எகஸ்பிரஸ் ஆழ்வார் திருநகரியில் நின்று செல்வது, நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதியில் நின்று செல்வது ஆகியவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.பாலுவிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

அதேபோல் தயாநிதி மாறன் எம்.பி. வேண்டுகோளான, யானைக் கவுனியில் புதிய மேம்பாலம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் 2022 டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அரக்கோணம் மக்களவை உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பியின் கோரிக்கையான திண்டிவனம் – நகரி அகல ரயில்பாதைப் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருத்தணியிலிருந்து அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு ரயில் எண்.40904-ஐ இயக்குவதற்கும், சோளிங்கர் ரயில் நிலையத்தில் சென்னை சென்ட்ரலிலிருந்து ஈரோடு, கோயம்புத்தூர், சத்யசாய் நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக தென்சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் தொகுதி எம்.பி., பி.வேலுசாமி விடுத்திருந்த கோரிக்கைகளான கோயம்புத்தூரிலிருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய இடங்களுக்கு கோயம்புத்தூர் – பொள்ளாச்சி – பழனி – திண்டுக்கல் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்படுவதற்கு முன்பு, இயக்கப்பட்டது போல் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே பல ரயில்கள் இயக்கப்படுவதால் மேட்டுப்பாளையத்திலிருந்து இந்த ரயில்ககளை இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பழனி – தாராபுரம் – ஈரோடு புதிய ரயில் பாதை திட்டப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கும், பழனி ரயில் நிலையத்தை அனைத்து நவீனப் பயணியர் வசதிகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாற்றுவதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி – பழனி – திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சி – பாலக்காடு டவுண் ரயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் எனத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

மேலும், தருமபுரி மக்களவைத் தொகுதில் உள்ள மொரப்பூர் ரயில் நிலையத்தில், சென்னை – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் கோயம்புத்தூர் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டுமென்ற டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்.பி.யின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேட்டூர் – சேலம் ரயில் பாதையில் கோவிலூரில் உள்ள சுரங்கப்பாதையில் தேவையான மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கோரியபடி, அயோத்தி செல்லும் விரைவு வண்டி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கும், பாலக்காடு – திருச்சி விரைவு ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்கவும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர், மின் விளக்குகள், ஏ.டி.எம்., வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்லவபுரம் நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்ககளின் இணைப்பு மையம் அமைப்பின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவ்வாறு டி.ஆர்.பாலு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : TT ,Southern Railway ,R. Palu , டி.ஆர்.பாலு
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...