இழப்பீடு வழங்காததால் விரக்தி; உயர்மின் கோபுரத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: 2ம் நாளாக உடலை வாங்க மறுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கலிங்கமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணி (48). இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அரியலூரில் இருந்து வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு உயர்கோபுர மின்பாதை அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப்பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் தனியார் நிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின் கோபுரம் அமைத்ததற்காக 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறியிருந்தார்களாம்.

தற்போது பணிகள் முடிந்த நிலையில் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்ததாக தெரிகிறது. மணியின் நிலத்தில் அமைக்கப்பட்ட உயர் மின்கோபுரத்திற்கும் ரூ.1 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டதாம். இதனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரியிடம் மீதி பணத்தை கேட்டபோது அதெல்லாம் கிடையாது, இவ்வளவுதான் தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டதாம். இதனால் மனவேதனை அடைந்த மணி தனது நிலத்தில் உள்ள உயர்கோபுர மின் கம்பத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் உறவினர்கள் செஞ்சி-சேத்பட்டு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணியின் இறப்புக்கு நியாயம் வேண்டும், ஒப்பந்தப்படி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி நாதா, சார் ஆட்சியர் அமித், செஞ்சி காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.15 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக கொடுத்த உறுதியின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மணியின் உடலை 2வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இழப்பீடு, அரசு வேலை இதனை உறுதி செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து விட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் அமித் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

Related Stories:

More
>