×

காங்., திமுக கூட்டணி கட்சிகள் பந்த்தால் புதுவையில் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை: கடைகள், வணிக நிறுவனங்கள் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவ. 2, 7, 13 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில் மழை மற்றும் பண்டிகை காலங்களிலும், வார்டு குளறுபடிகளை களையாமலும் அவசர கதியில் தேர்தல் நடத்தப்படுவதாக அனைத்து கட்சிகளும், வணிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு காரணமாக உள்ள என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்க கோரியும் புதுச்சேரியில் ஒருநாள் (11ம்தேதி) முழுஅடைப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. அறிவித்தபடி இன்று பந்த் போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. குறைவான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்கள் ஓடின. இந்த பஸ்கள் அனைத்தும் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாநில எல்லைவரை துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் புதுச்சேரியில் போக்குவரத்து சேவையில் அதிக பங்களிப்பு கொண்ட தனியார் பஸ்கள் ஓடாததால் பஸ் நிலையம் வெறிச்சோடின. அதேபோல் முழுஅடைப்பில் இடதுசாரிகள், வி.சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகள் பங்கேற்றதால் பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்களும் ஓடவில்லை.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். காய்கறி, மீன் மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் முக்கிய கடைவீதிகளில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழுஅடைப்பால் புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே பந்த் போராட்டத்தையொட்டி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுகவினர் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.


Tags : DMK Coalition ,Puduvayal Puduvai , Cong., DMK Coalition Parties Buses in Puduvayal Puduvai, Auto not running: Closure of shops, business establishments
× RELATED தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: ஜவாஹிருல்லா உறுதி