இந்தியன், அந்நியன் திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார்..!!

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர் தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார். நெடுமுடி வேணு கடைசியாக மலையாளத்தில் ஆணும் பெண்ணும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். 73 வயதான இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் இன்று அவர் உயிரிழந்தார். நெடுமுடி வேணு மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல தேசிய விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டி தம் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் தடம் பதித்த நெடுமுடி வேணுவின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். கேசவன் வேணுகோபால் என்கிற இயற்பெயரை நடிப்புக்காக மாற்றிக் கொண்டார். அவரது பெற்றொரின் சொந்த ஊரே நெடுமுடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>