இன்று ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதல்

ஷார்ஜா: ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 15 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 13 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் லீக் சுற்றில் பெங்களூரு அணி 14 போட்டிகளில் ஆடி, 9 போட்டிகளில் வென்று, எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தா 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று, ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி, எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. விராட் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் என பெங்களூரு அணியின் பேட்டிங் சற்று வலுவானதாக காட்சியளிக்கிறது. இருப்பினும் அந்த அணியின் டி வில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், ஸ்பின் பவுலர்களிடம் இத்தொடரில் அதிகமாக விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளனர். கொல்கத்தா அணியின் பேட்ஸ்மென்களில் சுப்மான் கில்லும், நிதிஷ் ராணாவும் மட்டுமே தொடர்ந்து நன்றாக ஆடுகின்றனர்.

கடைசி போட்டிகளில் வெங்கடேஷ் ஐயர் கை கொடுத்துள்ளார். மற்றவர்கள் ஒரு போட்டியில் அடித்து, 3 போட்டிகளில் சொதப்புகின்றனர். அந்த அணி, பவுலர்களால் மட்டுமே எலிமினேட்டர் வரை முன்னேறியுள்ளது எனலாம். பவுலர்களில் வருண் சக்ரவர்த்தி, பெர்குசன், சுனில் நரேன் ஆகியோர் இத்தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர். இப்போட்டியில் தோல்வியடையும் அணி, பைனலுக்கான வாய்ப்பை இழக்கும். வெற்றி பெறும் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணியே பைனலுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

More