×

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்ததுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ம் தேதி பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து புதுச்சேரியின் எதிர்க்கட்சி தலைவரும், திமுக அமைப்பு செயலாளருமான சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையில் அரசியல் சாசன விதி கேலி கூத்தாகும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இது சம்பந்தமான அரசாணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் வில்சன், தேர்தல் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மட்டுமே ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதே தவிர, இடஒதுக்கீடு திரும்ப பெற வேண்டும் என அனுமதி வழங்கப்படவில்லை என்று வாதிட்டார். அதுமட்டுமின்றி கொள்கை அடிப்படையில் அமைச்சரவை முடிவின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை திரும்ப பெறுவது குறித்து அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court ,Puducherry , Puducherry Local Election, Chennai High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...