×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு விற்பனை: அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு பெட்டகம் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ஆவின் நிறுவனம் சார்பாக சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை  அமைச்சர் சா.மு.நாசர் இன்று தொடங்கி வைத்தார். காஜு கட்லி, ஜாங்கிரி, லட்டு, பால்  பேடா, பால் கோவா போன்ற இனிப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு இனிப்பு  பெட்டியை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

பின்னர், அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சமயத்தில் 15 டன் ஆவின் பொருட்களை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தோம். இந்த வருடம் 25 டன் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதாவது 2.5 கோடி விற்பனை செய்யப்படும். ஆவின் நிறுவனத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க உள்ளோம். இந்த ஆண்டு இனிப்பு வகைகளில் சில மாற்றத்துடன், அதிக நுகர்வோரை சென்றடையும் வகையில் தயாரித்து அதன் மூலம் 50 சதவீதம் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 16 டன் இனிப்பு பொருட்களை எடுத்தது சம்மந்தமாக விசாரணை துறை ரீதியாக நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகளால் பால் பவுடர், வெண்ணெய் பொருட்கள் தேக்கம் அதிகமாக உள்ளது. விரைவில் அவற்றை உபயோகப் படுத்துவதற்கான பணிகள் நடைபெறும். எங்களுடைய சங்கத்தில் 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் பால் ஊற்றுகிறார்கள்.

பால்களை சரியாக கொள்முதல் செய்து வருகிறோம். பால் உற்பத்தி கொரோனா காலகட்டத்தில் அதிகமாகி வருகிறது. தமிழகம் முழுவதும் 26 லட்சம் லிட்டர் பால் தான் தேவைப்படுகிறது. எங்களிடம் மீதம் இருக்கும் பாலை உபபொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்துகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமாக தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் 3 மாதங்களில் சரிசெய்துவிடுவோம். கடந்த ஆட்சியில் டெண்டர் என்பது குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் டெண்டர் எடுக்கும் நிலை காணப்பட்டது.

ஆனால், ஆன்லைன் மூலம் விடப்படும் டெண்டர்களை இப்போது பத்திரிகைகள் வாயிலாக டெண்டர் அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதனால், எல்லோருமே டெண்டரில் கலந்துகொள்ளலாம். 1 லட்சத்து 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது. ஏற்கனவே 26 லட்சம் லிட்டர் தான் விற்பனை இருந்தது. தற்போது 27 லட்சத்து 70 ஆயிரம் லிட்டராக உள்ளது. உற்பத்தி என்பது 36 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் புரோக்கர்கள் மூலம் நடந்த விளைவுகள் இந்த காலத்தில் நடக்கக்கூடாது என்ற முதல்வரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் வெளிப்படை தன்மையுடன் அனைத்தும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு கோப்புகளும் கிடப்பில் போடப்படும் போது தான் அங்கே ஊழல் நடப்பதற்கு வழியாக இருக்கும். எனவே, பணியிடமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆட்சியில் சாதாரண ஒரு பணியிடமாறுதலை கூட பலவிதமான முறைகேடுகள் நடத்தி தான் செய்தார்கள். ஆனால், இப்போது எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஒரே இரவில் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆட்கள் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு அதையும் நிறுத்தி வைத்துள்ளோம். டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 800 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவே எடுக்கப்பட உள்ளது.

Tags : Deepavali festival ,Minister ,S.M.Nasser , Special dessert sale in the spirit ahead of Deepavali festival: Minister S.M.Nasser started
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...