×

வெள்ளிக்கிழமையில் வரும் விஜயதசமி... கோயில்களை திறக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் அவசர வழக்கு : நாளை விசாரணை

சென்னை : வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் ஆயுத பூஜை வரும் வியாழக்கிழமையும் விஜயதசமி வரும் வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படவுள்ளன. விஜயதசமி வெள்ளிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதால் சாமி தரிசனம் செய்ய முடியாது.

எனவே விஜயதசமி நாளில் கோயில்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தைக் கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல், கோயிலைத் திறக்காமல் பிடிவாதமாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை (அக். 12) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags : Vijayadasamy , வெள்ளிக்கிழமை,விஜயதசமி,கோயில்,ஹைகோர்ட், அவசர
× RELATED விஜயதசமியன்று கோயில் திறப்பு...