உ.பி.யில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம்!: அத்யாவசிய கடைகள் செயல்பட அனுமதி..!!

மும்பை: உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் விவசாயிகள் படுகொலையை கண்டித்து மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனை, அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மும்பை, புனே உள்ளிட்ட பெரு நகரங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு சில உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சிவசேனை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. வேளாண் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே உ.பி.யின் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் நடைபெறும் பந்த்-துக்கு மராட்டிய மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதால் அமைதியாக முழு அடைப்பு போராட்டம் நடப்பதாக அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளும் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு இடது சாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு தொழிற்சங்கங்களும் மராட்டிய மாநில பந்த்-துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 4 விவசாயிகள் கொல்லப்பட்ட பிரச்சனையில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories:

More
>