சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருள் விலை உயர்வை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த நிலையில், கட்டுமானத் தொழில் மட்டுமே மக்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் சிமெண்ட், கம்பி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்களான சிமெண்ட், இரும்பு கம்பி, எம்சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக எம்சாண்ட் ரூ.12,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.15,200 ஆகவும், சிமெண்ட் ரூ.380 ஆக இருந்த நிலையில் தற்போது 470 ஆகவும்  உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலையை மேலும் ரூ.60 உயர்த்தப் போவதாகவும் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இரும்பு கம்பி டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.69 ஆயிரமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி செங்கல், மரக்கட்டை, எலக்ட்ரிக் வயர்கள் உள்ளிட்ட கட்டுமானம் சார்ந்த அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. விலை உயர்வின் காரணமாக கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட விலையில் வீடுகளைக் கட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கட்டிடப் பணிகள் முடங்கிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், வீடுகளை கட்டித்தரும் கட்டுமான நிறுவனங்களின் செலவு குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களிடமே கூடுதலாக வசூலிக்க வேண்டியுள்ளதால் சாமானிய மக்களின் வீடு கட்டும் கனவு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசு உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை நெறிப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் போன்ற தனியொரு அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: