திருச்சியில் பலத்த மழை; சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் திரும்பியது: 3 அமைச்சர்கள் பயணத்தை ரத்து செய்தனர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு சென்ற விமானம் மழை காரணமாக மீண்டும்  சென்னைக்கே  திரும்பி வந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த  3 அமைச்சர்கள், தங்களது ரத்து செய்து விட்டு திரும்பி சென்றனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு 8.10 மணிக்கு 47 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. திருச்சியை நெருங்கியபோது, பலத்த மழையுடன்  மோசமான வானிலையால் விமானம் தரையிறங்க முடியவில்லை. அதனால் அந்த விமானம்  இரவு 10.30 மணிக்கு மீண்டும்  சென்னைக்கே திரும்பி வந்து விட்டது.

பயணிகள் 47 பேரும் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர். திருச்சியில் மழை ஓய்ந்து வானிலை சீரடைந்து விட்ட தகவல் கிடைத்தபின்பு, இரவு 11.30 மணிக்கு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி சென்றடைந்தது. பின்னர் அதிகாலை 1 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு காத்திருந்த 27 பயணிகளை ஏற்றி கொண்டு இன்று அதிகாலை 2.10 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானத்தில் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் சென்னைக்கு வர இருந்தனர்.

அவர்கள் 3 பேரும் நேற்றிரவு  திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் மழை காரணமாக விமானம் திருச்சியில் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டதை அறிந்ததும், அமைச்சர்கள், தங்களது பயணங்களை ரத்து செய்துவிட்டு, கார்களில் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். மற்ற பயணிகள் 27 பேர், திருச்சி விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, 4 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை சென்னை வந்தனர்.

Related Stories:

More
>