சங்ககிரி அருகே வீட்டில் ரத்த வெள்ளத்தில் கணவர் மரணம்: மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை

சேலம்: சங்ககிரி அருகே நிதி நிறுவனம் நடத்திவந்த இளைஞர் நள்ளிரவில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சந்தேகத்தின் பேரில் மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள புல்லாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தயானந்த். இவருக்கும் சேலத்தை சேர்ந்த அன்னப்பிரியாவுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்து கொண்டு இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நள்ளிரவில் உறவினர்களுக்கு போன் செய்த அன்னப்பிரியா கணவர் தயானந்திற்கு வலிப்பு ஏற்பட்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுவதாக கூறியுள்ளார். உறவினர்கள் சென்றபோது ரத்த வெள்ளத்தில் தயானந்த் உயிரிழந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தேவூர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உறவினர்களிடம் தனியாக விசாரணை செய்துள்ளனர். துப்பு ஏதும் கிடைக்காத நிலையில் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரித்தனர். அப்போது தயானந்தை அவரது மனைவியே அடித்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் மனைவியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே தயானந்த் வலிப்பு வந்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

Related Stories: