×

உபியில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மவுன போராட்டம்

சென்னை: உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த படுகொலையை கண்டித்தும், அதற்கு காரணமான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மவுன போராட்டம் நடந்தது. சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தபால் நிலையம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, டி.வி.துரைராஜ், ராமலிங்கம், வாசு, வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமையில் கொளத்தூரில் போராட்டம் நடந்தது.


சைதாப்பேட்டை சின்னமலையில் தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் மவுன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விஜய் வசந்த் எம்பி, மாநில துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன், மாவட்ட துணை தலைவர் செல்லக்குமார், திருவான்மியூர் மனோகரன், வில்லியம்ஸ், முத்தமிழ் மன்னன், கோகுல், சுசிலா கோபாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையில் அண்ணாசாலையில் மவுன போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் மவுன போராட்டம் நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமையிலும் மவுன போராட்டம் நடைபெற்றது.
இதே போல தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்ட தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது. போராட்டம் நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Congress ,Tamil Nadu ,UP , Congress silent protest across Tamil Nadu condemning the killing of farmers in UP
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்