பண்ருட்டி முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்..!!

கடலூர்: பண்ருட்டி முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த மாதம் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக காடான்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொழிலாளி கோவிந்தராஜ் அடித்து கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

பிரேத பரிசோதனையில் கோவிந்தராஜ் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மர்ம மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார். தொடர்ந்து, முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷூக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

வரும் அக்டோபர் 13ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக எம்.பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூப்பிபேன் என்றும் தெரிவித்திருந்தார்.

Related Stories: