×

மலைப்பகுதிகளில் தொடர் மழை ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் கிடுகிடு உயர்வு

பட்டிவீரன்பட்டி : மலைப்பகுதிகளில் தொடர் மழையால், திண்டுக்கல்லின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு பகுதியில் மழை பெய்தால் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து இருக்கும்.

இதன் மொத்த உயரம் 23.5 அடி. திண்டுக்கல் மாநகரம் மட்டுமல்லாமல் சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குடகனாறு மற்றும் கூழையாற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த தண்ணீர் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் தேக்கப்படுகின்றது.

தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காமராஜர் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாறை மலைப்பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 18 அடியாக உள்ளது. மேலும் இந்த தொடர் மழையால் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களும் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

Tags : Attur Kamaraj Reservoir , Pattiviranapatti: Due to continuous rains in the hills, the water level in the Kamaraj Reservoir, the source of drinking water in Dindigul, has increased.
× RELATED கோடை வெப்பத்தால் ஆத்தூர் காமராஜர்...