தேனி மாவட்டத்தில் 5வது மெகா முகாமில் ஒரே நாளில் 42,350 பேருக்கு தடுப்பூசி

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசிக்கான மெகா முகாமில் ஒரே நாளில் 60 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசிக்காக நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலை தேனி நகராட்சிக்குட்பட்ட அல்லிநகரம் நகராட்சி ஆரம்பப்பள்ளி, நகராட்சி அலுவலகம், என்ஆர்டி மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில்  நேரில் சென்று கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.   

நேற்று தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைமயிலாடும்பாறை, போடி, சின்னமனூர், உத்தமபளையம், கம்பம் ஆகிய எட்டு வட்டாரங்களிலும்  மொத்தம் 410 இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் நேற்று  42 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்படி, இதுவரை தேனி மாவட்டத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் தலைவர் மொக்கப்பன் தலைமையில், துணைத் தலைவர் சரோஜா சிங்கராஜ் முன்னிலையில்  முகாம் தொடங்கியது. இதேபோல் நாராயணத்தேவன் பட்டி சுருளிப்பட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஆங்கூர் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் தடுப்பூசி  பெண்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர். ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன், பிடிஓக்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி,  முகாம் கண்காணிப்பு அலுவலர் சேகர்,  ஊராட்சித் தலைவர்கள் நாகமணி வெங்கடேசன், சாந்தி பரமன், பொன்னுத்தாய் குணசேகரன், பொன்னுத்தாய் செல்லையா  முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கம்பம் நகரில் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் 16 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நான்கு மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் பெரும்பாலோனோர் தடுப்பூசி செலுத்தி விட்டதால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன் முகமது தலைமையில் நகராட்சி ஊழியர்கள் 11 வது வார்டு கம்பமெட்டு பகுதியில் ஆட்டோ மூலம் ஒலி பெருக்கி அமைத்து வீடு வீடாக சென்று  பொதுமக்கள் இல்லங்களை தேடி சென்று தடுப்பூசி செலுத்தினர்.

பெரியகுளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் முரளிதரன், அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதில், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பாக்கியம் நடத்தினார். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சொக்கலிங்கம், பிரதாப்சிங் ஆகியோர் செய்தனர்.

Related Stories:

More
>