×

நாகர்கோவில் அருகே அதிகாரிகள் அலட்சியம் 77 ஏக்கரில் நீரில் முழ்கி கிடக்கும் தென்னை மரங்கள்-பாதியில் நிற்கும் கால்வாய் கட்டுமான பணி

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் சுமார் 77 ஏக்கர் தென்னந்தோப்பு கடந்த ஒரு மாதமாக  வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி தென் பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இந்த தென்னந்தோப்புகளை சுற்றி சிறு, சிறு குளங்கள் இருந்தன. இந்த குளங்கள் நிரம்பி, தண்ணீர் வெளியேறுவதற்காக சுமார் 22 அடி வீதியில் புற கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தது.

பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கால்வாய் வழியாக மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் பொழிக்கரை வரை சென்று, கடலில் கலக்கும். காலப்போக்கில் போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு சாலைகள், கட்டிடங்கள் உருவாகின. சிறு, சிறு குளங்களிலும் மண் நிரம்பியது. இதனால் மழை காலங்களில் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷ் புயல் காரணமாக பெய்த கன மழையில் தென்னந்தோப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தென்னந்தோப்புகள் நீரில் மூழ்கின. மேலும் அருகில் உள்ள பள்ளம்துறை ஊராட்சி பகுதியில் 75 வீடுகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, உடனடியாக கால்வாய் சீரமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை தொடங்கினர். சுமார் இரண்டரை கி.மீ. தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் வகையில் 6 ஜே.சி.பி.க்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கால்வாய் வெட்டப்பட்டு, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் கால்வாய் வெட்டும் பணி நடந்து கொண்டு இருக்கும் போதே கால்வாயில் கட்டுமான பணியும் தொடங்கின. இரு பிரிவுகளாக இரண்டு காண்ட்ராக்டர்களுக்கு இந்த பணி கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு காண்ட்ராக்டர் முடிப்பதற்கு முன்பே, மற்றொரு காண்ட்ராக்டர் பணியை தொடங்கினார். இந்த பணிக்காக தண்ணீர் வெளியேறும் பகுதியை அடைத்திருந்தனர்.

தற்போது ஒரு காண்ட்ராக்டர் பணியை முடிக்க, மற்றொரு காண்ட்ராக்டர் செய்த பணி பாதியில் நிற்கிறது. இதனால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், தென்னந்தோப்பில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 3 அடிக்கு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென்னை மரங்கள் அழுகும் நிலைக்கு வந்துள்ளன.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகதீஸ்வர லிங்கம் கூறுகையில், சுமார் 77 ஏக்கரில் தென்னந்தோப்புகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை இன்ஜினியர்களிடம் தகவல் கூறியும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை இல்ைல. வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும். தற்போதைய தமிழ்நாடு அரசு, மழைக்கால பாதிப்பை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால் குமரி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே கலெக்டர் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, கிடப்பில் கிடக்கும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். அதற்கு முன் தற்போது தென்னந்தோப்பை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Nagargo , Nagercoil: About 77 acres of coconut groves in Kumari district have been flooded for the past one month. Thus the coconut trees
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...