×

நிறம் மாறி மிரட்டும் மன்னார் வளைகுடா கடல் பகலில் பச்சை; இரவில் நீலம் கடல் உயிரினங்களுக்கு ஆபத்தா? ராமநாதபுரம் மீனவர்கள் அச்சம்

ராமநாதபுரம் / கீழக்கரை, அக். 11: மன்னார் வளைகுடா கடல் பகலில் பச்சையாகவும், இரவில் நீலமாகவும் நிறம் மாறி வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தா என கேள்வி எழுந்துள்ளது.தமிழக தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் மண்டபம் முதல் வேதாளை வரை கடல் நீரோட்டத்தால் பச்சை நிற பூங்கோரை பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் பாம்பன் ரயில் பாலம் நுழைவு பகுதி முதல் வேதாளை வரையிலான கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றத்துடன் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இரவு ஆனதும் கடல் நீலநிறத்திற்கு மாறிவிடுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மரைக்காயர்பட்டினம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி கூடத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடல் வள விஞ்ஞானிகள் கடல் நீரை ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது.

தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால்தான் கடல் தண்ணீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் சில மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இப்பாசிகள் படரும்போது பாறை இடுக்குகளில் வசிக்கும் மீன்களின் செதில்கள் அடைபட்டு சுவாசிக்க இயலாமல் போவதால் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கும். கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். மீனவர்கள் அஞ்சத் தேவையில்லை’’ என்றனர்.

Tags : Gulf of Mannar ,Ramanathapuram , Ramanathapuram / Lower Coast, Oct. 11: Fishermen as the Gulf of Mannar sea turns green during the day and blue at night
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு