×

புதுக்கோட்டை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயல் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு கோடை சாகுபடிக்காக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறுவதற்காக 57 அரசின் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கறம்பக்குடி அருகேயுள்ள குரும்பிவயல் கிராமத்தில் இந்த குறுவை சாகுபடிக்காக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் 5,000திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைவதாக குற்றம்சாட்டி அந்த பகுதி விவசாயிகள் கடந்த 2, 3 நாட்களாகவே தங்கள் பகுதியிலும் கடந்த காலத்தை போல அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றாததால் தற்போது கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தங்கள் கிராமத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 57 கிராமங்களின் பட்டியலில் அந்த கிராமத்தின் பெயர் இல்லாமல் உள்ளது.

இதனால் தங்கள் பகுதியில் விளைந்த நெல்லை சுமார் 10 கி.மீ தூரம் கொண்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் உடனடியாக தங்கள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்பது அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட கறம்பக்குடி வட்டாட்சியர் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags : Pudukkottai , Farmers, road block
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...