×

புகையிலை, வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ஆண்டுக்கு ரூ.1,200 கோடி செலவழிக்கும் ரயில்வே நிர்வாகம்..!!

டெல்லி: புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில் நிலையங்களில் குறிப்பாக வடமாநில ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை பல இடங்களில் காணமுடியும். ரயில்களின் ஜன்னல் பகுதிகளில் அதிகப்படியான கறைகளை பார்க்கலாம்.குறிப்பாக பான், குட்கா, வெற்றிலை மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் துப்புவதால் ஏற்படும் கறைகள் மற்றும் அடையாளங்களை சுத்தம் செய்வதற்காக மட்டும் ரயில்வே துறை ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயை செலவழிக்கிறது.

இது தவிர பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சி ஒன்றை ரயில்வே மேற்கொண்டுள்ளது. கையளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட் ஒன்று ரயில் நிலையங்களில் விற்கப்படவுள்ளது. பான் மசாலா, வெற்றிலை எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட முடியும். எளிதில் மங்கிவிடும் பொருளால் இது செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. 5 முதல் 10 ரூபாய்க்குள் இருக்கும் இந்த பாக்கெட்டை 15 முதல் 20 முறை வரை கூட பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

3 வடிவங்களில் பை கிடைக்கும். இதை முதற்கட்டமாக வதற்கு மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்களின் போது சற்றே கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இந்தியாவில் பொது இடங்களில் எச்சில் துப்புவது பெரும் தொல்லையாக இருக்கிறது.அதனால் தான் இந்த சமீபத்திய பசுமை கண்டுபிடிப்பை ரயில்வே முன்னெடுத்துள்ளது. இதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பிற ரயில் நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் கூறப்படுகிறது.


Tags : Railway , Tobacco, betel saliva, Rs 1,200 crore, railway administration
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...