×

வாணியம்பாடி அருகே கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய இளைஞர் தற்கொலை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு உயிரை காவு வாங்கி இருக்கிறது ஆன்லைன் ரம்மி. சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி மோகத்திற்கு பலியாகியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்ற இளைஞர் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். வாக்கு செலுத்திய பிறகு சென்னைக்கு புறப்பட்ட அவர் செலவுக்கு தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார்.

வாங்கும் சம்பளத்தை ஆனந்தன் வீட்டுக்கு கொடுக்கவே இல்லை என தெரிகிறது. சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் தங்களிடமே பணம் கேட்டதால் ஆனந்தனின் தாய் மற்றும் சகோதரர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் தனது செல்போனை உடைத்துவிட்டு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்ததாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற தவறான பாதையில் செல்வோரை உறவினர்கள் கண்டிக்காமல் அவர்களுக்கு புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அரசு மனநல மருத்துவர் கூறுகிறார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் அனுமதி தொடர்வதால் இதுபோன்ற துயரங்களும் தொடர்கின்றன.

Tags : Vaniyambadi , Rummy online
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...