×

2 நாடுகளுக்கும் இடையே சுமூக தீர்வை எட்ட இந்தியா வழங்கிய ஆலோசனைகளை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை : இந்திய ராணுவம்!!

புதுடெல்லி:  கிழக்கு லடாக்கில் படைகள் குவிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா-சீனா இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 13வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையேயான ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 13வது பேச்சுவார்த்தை நேற்று காலை தொடங்கியது. கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுபாட்டு கோட்டு அருகே சீனாவுக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது.

அப்போது கிழக்கு லடாக் எல்லையில் உள்ள எஞ்சி இருக்கும் ராணுவ படைகளை திரும்பப் பெறுமாறு இந்தியா வலியுறுத்தியதாக தெரிகிறது. 2 நாடுகளுக்கும் இடையே தீர்வு ஏற்படும் வண்ணம் உறுதியான ஆலோசனைகளை வழங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை சீனா ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் தீர்வை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் எந்த ஆலோசனைகளையும் சீனா வழங்கவில்லை என்றும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. எந்த தீர்வும் எட்டப்படாத பொழுதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த பேச்சுவார்த்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்வது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் சீனாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.  


Tags : China ,India ,Indian Army , இந்தியா ,ஆலோசனை,சீனா ,இந்திய ராணுவம்
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...