செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது..!!

செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் வாக்கு சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 6ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த 2ம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 74 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் போது அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியின் 1வது மற்றும் 2வது வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு 32வது வாக்குச்சாவடியில் நடைபெற்றது. 1வது வார்டு உறுப்பினராக சங்கர் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றிருக்க வேண்டும்.

1வது வார்டை சேர்ந்த வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய வாக்கு சீட்டு 2வது வார்டை சேர்ந்தவர்களுக்கும், 2வது வார்டை சேர்ந்த வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய வாக்கு சீட்டு முதல் வார்டை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த குளறுபடி காரணமாக குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் நடைபெற்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

Related Stories:

More
>