×

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து புதுவையில் திமுக, காங். கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம்..!!

புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வார்டு மறுவரையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது.

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று புதிய அறிவிப்பை அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக நீதிக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக கூறி திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. ஒருசில அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.


Tags : New Delhi ,DMK ,State Election Commission , Local elections, reservation, novelty, full blockade
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...