×

ராமேஸ்வரம் அருகே பச்சை நிறத்திற்கு மாறிய பாம்பன் கடல் குறித்து மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை!: விஞ்ஞானிகள் விளக்கம்..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதி பச்சை நிறமாக மாறி இருப்பது குறித்து மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடற்பகுதியில் சில நாட்களாக கடலின் நிறம் மாறுபாடு அடைந்துள்ளது. கடலில் நிறம் மாறி பச்சையாக பாசி படிந்தது போன்று காணப்படுகிறது. பாம்பன் ரோடு மற்றும் ரயில் பாலத்தை ஒட்டிய கரையோரத்திலும், படகுகள் நிறுத்தப்படும் பகுதிகளிலும் கடல் பச்சை நிறமாக மாறி இருந்ததை காண முடிந்தது. இதனை அறிந்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள், பச்சை நிறமாக மாறிய கடல் நீரை ஆய்வு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பன் முதல் வேதாளி வரை பச்சை நிற பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியதே இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது விஷத்தன்மை உடைய பாசி கிடையாது என்றும் ஓரிரு வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்பதால் மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Bombay Sea ,Rameswaram , Rameswaram, Green, Pamban Sea, Scientists
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...