×

ருதுராஜ், உத்தப்பா அதிரடி பைனலுக்கு முன்னேறியது சென்னை

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர்-1 ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசியது. பிரித்வி, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். தவான் 7 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். ஒரு முனையில் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, ஷ்ரேயாஸ் 1 ரன், அக்சர் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

பிரித்வி 60 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் டு பிளெஸ்சியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 10.2 ஓவரில் 80 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. ஹெட்மயர் 37 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிராவோ பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட்டார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. ரிஷப் பன்ட் 51 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டாம் கரன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.சென்னை அணி பந்துவீச்சில் ஹேசல்வுட் 2, ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4  ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து, 4  விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 70 ரன்(50 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். உத்தப்பா 63 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) டோனி 18 ரன் (6பந்து, 4 பவுண்டரி, 1சிக்சர்) (அவுட் இல்லை) எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் டாம் கரன் 3, அன்ரிச் நோர்ட்ஜே, ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஆர்சிபி - கேகேஆர் அணிகளிடையே இன்று நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் டெல்லி நாளை மறுநாள் குவாலிபயர்-2 ஆட்டத்தில் மோதும்.

Tags : Rudraj ,Uthappa ,Chennai , Rudraj, Uthappa advanced to the action final Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...