×

பிரித்வி, பன்ட் அதிரடி அரைசதம் சூப்பர் கிங்சுக்கு 173 ரன் இலக்கு

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர்-1 ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 173 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரித்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். தவான் 7 ரன் மட்டுமே எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டார். ஒரு முனையில் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன் குவிக்க, ஷ்ரேயாஸ் அய்யர் 1 ரன், அக்சர் படேல் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பிரித்வி 27 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட அரை சதம் அடித்து அசத்தினார்.

அவர் 60 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் டு பிளெஸ்சியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 10.2 ஓவரில் 80 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கேப்டன் ரிஷப் பன்ட் - ஷிம்ரோன் ஹெட்மயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 83 ரன் சேர்த்தது. ஹெட்மயர் 37 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிராவோ பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட்டார். கடைசி ஓவரில் பன்ட் அரை சதத்தை நிறைவு செய்தார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. ரிஷப் பன்ட் 51 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டாம் கரன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி பந்துவீச்சில் ஹேசல்வுட் 2, ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை அணி 20 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Tags : Kings , Separation, Punt Action Fifty Super Kings 173-run target
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...