×

நீர்வளத்துறை மூலம் கதவணை, தடுப்பணை, புதிதாக நீர்நிலைகள் அமைப்பதற்காக ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்: அக்.21ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்க திட்டம்

சென்னை: ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அறிக்கையை அக்.21ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நீராதாரங்களை பெருக்க நீர்வளத்துறை என்கிற தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த துறை சார்பில் மாநிலம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணைகள் அமைக்கப்படும் என்றும் புதிதாக 8 நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

அதே போன்று, தமிழகத்தில் புதிதாக ஏரிகள் புனரமைக்கவும், புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றும், இதற்காக நடப்பாண்டில் மட்டும் நீர்வளத்துறை மூலம் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான மேற்கொள்ளவும் அமைச்சர் துரைமுருகன் முடிவு செய்து இருந்தார். இதையடுத்து முதற்கட்டமாக 500 இடங்களில் தடுப்பணை, புதிதாக 6 இடங்களில் கதவணை அமைக்கப்படுகிறது. மேலும், ஆற்றப்படுகைளில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கடைமடைகளில் நீரொழுங்கிகள் ஏற்படுத்தப்படுகிறது. இதன். மூலம் கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்புதன்மை குறைவது மட்டுமின்றி அங்கு பாசன வசதிகளுக்கு அந்த நீரை பயன்படுத்த முடியும். இதற்காக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராம மூர்த்தி தலைமையில் தடுப்பணை, கதவணை, புதிதாக நீர்நிலைகள் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, இப்பணிகளுக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், நீர்வளத்துறை திட்டம் மற்றும் உருவாக்க பிரிவு தலைமை பொறியாளர் பொன்ராஜ், கட்டுமான ஆதாரம், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு தலைமை பொறியாளர் தனபால் தலைமையிலான பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் வரும் அக்டோபர் 21ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு எந்த நிதியுதவியின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக நிதித்துறை முடிவு செய்கிறது. இதை தொடர்ந்து நிதித்துறை பரிந்துரையின் பேரில் இப்பணிகளுக்காக நிதியுதவி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை தொடர்ந்து இப்பணிகளுக்கு நிதிப்பெறப்பட்டு நீர்வளத்துறை மூலம் இப்பணிகளை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.


Tags : Water Resources Department ,Government of Tamil Nadu , Intensity of work to prepare detailed project report for projects worth Rs. 16 thousand crore for construction of gates, dams and new water bodies by the Water Resources Department: Plan to submit a report to the Government of Tamil Nadu by October 21.
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...